Monday, May 24, 2010

மதம் நமக்குத் தேவையா?

யார் உருவாக்கியது மதம்? ஏன் மனிதன் மட்டும் பலப் பல மூட நம்பிக்கைகளின் பெட்டகமாய் உள்ளான்? அறிவு ஜீவியாய் இருக்கும் மனிதன்தான் முழு முட்டாளாகவும் உள்ளான்.


மதம் என்ற பெயரில் மனிதன் நடத்திய, நடத்துகின்ற மிருகத்தனத்தின் உச்சகட்டம்தான் இன்றைய உலகம். ஏன் மதத்தின் பெயரில் அவன் அதிக ஓட்டுப் பெற முயன்றான் என்பது ஒரு புரியாத புதிர். மதங்களின் போட்டியில் அவை அதிக நபர்களை தம் பால் இழுக்க எவ்வளவோ முயற்சிகளை இன்னும் செய்து கொண்டிருக்க மதத்தின் பெயரில் கொலை, கொள்ளை, மற்றும் பல பலாத்காரங்கள் நடக்காமல் இருக்கிறதா?


மனிதனின் இரட்டை முகம் என்ற ஒரு கொள்கையை நாம் உற்று நோக்கினால், நம்மில் ஏறத்தாழ அணைவரும் வெளியே ஒரு தோற்றம் உள்ளே ஒரு தோற்றம் என இயல்பு வேறுபாடுள்ள உயிர்களாய் இயங்குவதை அறிவோம். அது நமது பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கமாய் இருக்க, நாம் நமக்கே வகுத்துக் கொண்ட ஒரு மதிப்பீடாக மதம் என்ற ஒரு உடையை உடுத்தி, அதை மற்றவரையும் அணிய வைக்க முயல்கிறோம்.


மதத்தின் நற்கொள்கைகள் என்ற நம்பிக்கை நாம் பின்பற்ற முயல்வது. ஆனால் உண்மையில் ஒரு கொள்கையை பின் பற்றுவது என்பது அறிவார்த்த முறையில் கடினமான ஒரு காரியமாய் உலகியலில் இருப்பது ஏன் என்ற கேள்வியை நாம் கேட்க மறந்து விடுகிறோம். நல்ல காரியம் என மத ஆய்வாளர்கள் சொன்ன கருத்துக்களை நாம் சொல்வது ஒரு புறம் இருக்க அதை நாம் கடைப்பிடிக்கிறோமா என்பது ஒரு முக்கியமான கேள்வி.

மதங்கள் நல்லது செய்யச் சொல்கின்றன ஆனால் மற்றவரை தம் மதத்தில் சேர்க்கவும் என்று என்றும் சொல்லியதில்லை. மதவாதிகளின் ஆதரவாளர்களாய் உலகின் வெவ்வேறு அரசுகள் ஊட்டிய ஒரு இயக்கமாய் மதச்சேர்ப்பு இருந்தது என்று நம்பத் தோன்றுகிறது.

மனிதத்துவம் என்ற ஒரு கொள்கை இரக்க அடிப்படையில் அமைந்தது. ஆனால் மனிதன் என்ற சிந்தனைச் சிற்பி எண்ணங்களின் சிறப்பம்சம் வாய்ந்த ஒரு உயிர் என்ற அடிப்படையில் அவன் உருவாக்கிய வாழ்வியலாய் மதமும் அவனைத் தொடர, நல்ல கருத்துக்களை விட்டு விட்டு ஏதோ ஒரு காரணத்திற்காக சுயநல அடிப்படையில் மத வளர்ப்பில் மதம் கொண்டு அலையும் இனமாய் மாறினான்.

இன்று மதம் என்ற பெயரால் நடக்கும் கொலை வெறிக்கு என்ன பெயர் இடலாம் எனத் தெரியவில்லை. ஆசையை அகற்று என்ற புத்த மதத்தினர் ஆசையில்லாமல் இல்லை. தர்மம் தலை காக்கும் என்ற இந்து மதத்தினர் தர்ம காரியம் மட்டுமே செய்கின்றனரா? இஸ்லாமின் இனிமையை விட்டுவிட்டு ஏன் சில பயங்கரவாதிகள் இன்னல் தரும் செயல் புரிய வேண்டும்? கிறிஸ்துவம் என்ற அன்பு மொழி ஏன் அடையாளம் தேடி அலைய வேண்டும்?

இது போல் இன்னும் பல மதங்கள். மனிதனின் மதம், மத வெறி, ஒரு மிருகமாய் பிறக்கும் தன் சுயத்தை ஆராய்வதை விட்டுவிட்டு மனிதப்பிறவிக்கு அடையாளமாய் மதம் கொண்டு அலையும் இத்தன்மை என்று மாறும்?

மதம் நமக்குத் தேவையா?
மதம் சொன்ன நல்லவை மறந்து ஏன் நாம் இயங்குகிறோம்?
நம் வாழ்வின் அர்த்தத்தை மதம் தருகிறதா? அப்படித் தருகிறதெனில் ஏன்
கொலை வெறி?

உங்களில் அறிவுத்திறம் உள்ளவர்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வீர்களா?

பொதுவாக சினிமா, காதல், பாட்டு, புகழ் என்று அலைவது நம் இயல்பு. அதன் ஈர்ப்பு அணைவருக்கும் உண்டு என்றாலும், கொஞ்சம் மனிதம், மதம் பற்றியும் எண்ணுவீர்களா? எண்ணத்தை சொல்வீர்களா?

பட உதவி: www.alaska-in-pictures.com