Thursday, February 11, 2010

தெய்வத்தை உதைக்கலாமா?


தெய்வத்தை உதைக்கலாமா?

என்னடா இது கேள்வியே சரியில்லையே என்று எண்ணுகிறீர்களா? நான் தெய்வம் என்று சொல்வது குழந்தைகளைப் பற்றிங்க...குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பது சரியா இல்லையா?


உள்ளதை உள்ளபடி பேசும் குணம் குழந்தைகள் இயல்பு. குழந்தைகள் பிறப்பில் அப்படியே! வாக்கெல்லாம் நல்வாக்கு, உண்மை. அதனால் அந்த மன நிலையை புனிதமான தெய்வத்திற்கு ஒப்பிடுகிறோம்.


இயற்கையான மிருக குணங்கள் என்பது நமது இரத்தத்தில் கலந்த விசயம். அவற்றை மீறி கருணை என்ற ஒரு இரக்க குணத்தையும் நாம் எப்படிக் கொண்டோம் என்று பார்க்கும் போது அதுவே தெய்வ குணம் என்றும் கூறலாம். அன்பே தெய்வம் என்று கூறும் போது குழந்தைகள் நம் மீது மிக அதிக அளவில் அன்பு வைக்கும் தெய்வங்கள் என்றும் கூறலாம்.

குழந்தைகளை அடிக்கலாமா என்பதுதான் எனது ஆராய்ச்சி. எதனால் அந்த சூழ்நிலை ஏற்படுகிறது? ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் ஒரு மாதிரி குடும்பம் என்று எனது குடும்பத்தையே எடுத்துப் பார்த்த போது சிந்தனை பலவாறு ஓடியது.


நடைமுறை வாழ்வில் இந்த தெய்வங்கள் பெரியவர்கள் கொடுக்கும் அடியில் இருந்து தப்பிக்க இயலாது. ஆரம்பத்தில் என் தங்கமே, என் குலம் ஆள வந்த ராஜாவே என்றேல்லாம் கொஞ்சி மகிழும் நாம், மெல்ல மெல்ல நமது கோபத்தை குழந்தைகளின் மேல் காட்ட ஆரம்பிக்கிறோம்.


குழந்தைகளின் மீது நமது பழக்கவழக்கங்கள், மனோபாவம், மற்றும் குதர்க்கமான நம்பிக்கைகள் போன்றவற்றை நாமே திணிக்கிறோம். ஒரு தெய்வம் மெல்ல மெல்ல சாதாரணமான மனிதப் பிறவியாய் மாற பெரியவர்களே காரணம். நானே குழந்தைகளை அடித்திருக்கிறேன் பின்னர் வருந்தியும் உள்ளேன்.


குழந்தைகள் தாம் வாழும் சுற்றுச்சூழலிருந்தும், தம் குடும்பத்திலிருந்தும் தமது வாழ்க்கை அனுபவங்களையும், அதன் படி செயலாக்கங்களையும் கற்கின்றன. நல்ல பழக்கங்கள் என்று நாம் சொல்லக்கூடிய புத்தகப் பழக்கங்கள், நாம் அதைக் கடைப் பிடித்தால்தானே குழந்தைகளும் கடைப்பிடிக்கும். குறிப்பாக நாம் உண்மையே பேசவேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறோம், ஆனால் யாராவது தொலைபேசி மூலம் அழைத்தால் அம்மா பாத்ரூமில் இருக்காங்க என்று சொல்லு என்று ஒரு பொய்யை அறிமுகப் படுத்தும் போது, அந்தக் குழந்தை மனதில் பொய் சொல்வதை வித்திடுகிறோம். திருடக் கூடாது என்று சொல்லித் தந்து விட்டு கணவன் பர்ஸில் இருந்து கொஞ்சம் பணத்தை அவ்வப்போது குழந்தைகள் முன் எடுக்கும் (அன்போடும் உரிமையோடும் எடுத்தாலும்) ஒரு மனைவி, திருடுவதைச் சொல்லித் தருகிறாள்.

ஒற்றுமையாய் வாழவேண்டும் என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் கணவன் மனைவிக்கிடையே நடக்கும் ஒரு யுத்தம் குழந்தைகளை மிகவும் புண்படுத்தும். அப்படி கணவன் மனைவி சண்டை போட்டுக் கொள்ளும் போது அன்பாய் பேச வேண்டும் என்கிற நாம், பிஞ்சு உள்ளங்களில் விஷம் ஏற்றுகிறோம். அப்படி ஒரு சண்டை வராமல் இருக்கும் சூழ்நிலைகளை பெற்றோர் உண்டாக்க வேண்டும் அல்லது அவர்கள் கேட்காத போது பேசித் தீர்க்கவேண்டிய விசயமாக்கிக் கொள்ள வேண்டும்.

இப்படியாய் பல உதாரணங்களை நாம் அடுக்கலாம். மனோதத்துவ ரீதியில், இது போன்று வீட்டிலோ,வெளியிலோ நடக்கும் பல விசயங்கள் குழந்தைகளின் வாழ்வியலை, வளர்ச்சியை, மனப்பாங்கை, அவர்கள் நடந்து கொள்ளும் முறைகளை பாதிக்கும்.

அன்பாய்ப் பேசவேண்டும் என்றால் குழந்தைகளை அன்பான சூழ்நிலையில் வளருங்கள்.
உண்மை பேசவேண்டும் என்றால் குழந்தைகள் முன் உண்மை பேசிப் பழக்குங்கள்.
திருடக் கூடாது என்றால், குழந்தைகள் முன் திருடு போல் செய்யும் சிறு விஷயங்களைக் கூடத் தவிருங்கள்.
வன்முறை கூடாது என்றால் சண்டைகள் போடுவது, அடிப்பது, பொருட்களை உடைப்பது போன்ற வன்முறைகளைத் தவிருங்கள்.
மது அருந்துவது தவறு என்பது தெரிந்தும், குழந்தைகள் முன் மது அருந்தும் தகப்பன் செய்ய்யும் செயல்களைத் தவிருங்கள்.

ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை உருவாக்க ஆரோக்கியமான எண்ணம் உள்ள பெற்றோர் வேண்டும். தாம் விரும்புவது என்று தொலைக்காட்சிப் பெட்டி முன் உட்கார்ந்து வாழ்நாள் முழுதும் கழிக்கும் குடும்பங்களையும் நான் பார்த்துள்ளேன். அவர்கள் பார்க்கும் நாடகங்களில் வரும் வில்லிகள், ஒருவரைப் பழிவாங்குவது எப்படி என்றலையும் பாத்திரங்கள், குழந்தைகளுக்கும் காட்சிகள் மூலம் வன்முறையைக் கற்பிக்கின்றன. நல்ல குழந்தைகள் உருவாக, நல்ல பெற்றோர்கள் முதலில் வேண்டும்.

இது முதல் படி. வெளியே சென்று நடைமுறை வாழ்க்கையில் குழந்தைகள் பார்த்துக் கற்கும் விசயங்கள் அவர்கள் மனதைப் புடம் போடும் போது, அடிப்படையாய் நமக்குத் தேவை என்ன என்பதை நல்ல பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். அப்படிப் பட்ட பெற்றோர்கள் நிறைந்த சமுதாயம், கட்டாயம் நல்ல வித்துக்களை, நல்ல விருட்சங்களாய் மாற்றுகின்றனர்.

நல்ல சமுதாயம், நாம் ஏற்படுத்துவதுதானே! வானத்தில் இருந்து பரிசாய் ஒரு நல்ல சமுதாயம் வர முடியுமா? நாளைய நல்ல சந்ததி வளர, நமது குழந்தைகள் நல்ல எண்ணங்களுடன் தெய்வங்கள் போல் ஒளிர வழி செய்வது பெற்றோர்களே உங்கள் மனதிலும் செயலிலும் உள்ளது.

குழந்தை தெய்வங்களை அடித்து அவர்கள் மனங்களைப் புண்படுத்தலாகாது. பெரியவர்கள் மாறவேண்டும். அன்பு, பண்பு, பாசம், அடக்கம், பொய் பேசாமை, திருடாமை, நல்லொழுக்கம், போன்றவற்றை பெற்றோர்கள் கொள்ளவேண்டும்.

ஒரு மாற்றத்தை உண்டாக்க, முதலில் நீங்கள் அந்த மாற்றத்தை மேற்கொள்ளுங்கள் என்று சொன்ன காந்தியின் வாக்கு, எந்நாளும் கடைப்பிடிக்க வேண்டியது.

என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே?

புகைப்படம்: Climatechangecorp

4 comments:

  1. சொல்லிட்டா போச்சு.. உங்க கருத்துக்கு ஒரு ஓ...

    ReplyDelete
  2. நல்ல விஷயம்... எழுதிய உங்களுக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
  3. சாம
    தான
    பேத
    தண்டம்

    என எடுத்தவுடனே அடிப்பதைவிட....

    அன்பாக,
    குழந்தைக்கு வேண்டியதைக் கொடுத்து அதற்குப் புரியவைக்க முயற்சித்து,
    பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டு அக்குழந்தைக்குப் புரியவைத்து,

    இவற்றிலெல்லாம் அக்குழந்தைக்குப் புரியாவிட்டால் அடித்துத் திருத்தலாம் தானே!!

    ReplyDelete
  4. Custom Homework Writer have doctorates credentials that assures to clientele of receiving high caliber Custom Homework Writing Services to realize their aspirations of admirable grades in their College Homework Assignments.

    ReplyDelete