Monday, May 24, 2010

மதம் நமக்குத் தேவையா?

யார் உருவாக்கியது மதம்? ஏன் மனிதன் மட்டும் பலப் பல மூட நம்பிக்கைகளின் பெட்டகமாய் உள்ளான்? அறிவு ஜீவியாய் இருக்கும் மனிதன்தான் முழு முட்டாளாகவும் உள்ளான்.


மதம் என்ற பெயரில் மனிதன் நடத்திய, நடத்துகின்ற மிருகத்தனத்தின் உச்சகட்டம்தான் இன்றைய உலகம். ஏன் மதத்தின் பெயரில் அவன் அதிக ஓட்டுப் பெற முயன்றான் என்பது ஒரு புரியாத புதிர். மதங்களின் போட்டியில் அவை அதிக நபர்களை தம் பால் இழுக்க எவ்வளவோ முயற்சிகளை இன்னும் செய்து கொண்டிருக்க மதத்தின் பெயரில் கொலை, கொள்ளை, மற்றும் பல பலாத்காரங்கள் நடக்காமல் இருக்கிறதா?


மனிதனின் இரட்டை முகம் என்ற ஒரு கொள்கையை நாம் உற்று நோக்கினால், நம்மில் ஏறத்தாழ அணைவரும் வெளியே ஒரு தோற்றம் உள்ளே ஒரு தோற்றம் என இயல்பு வேறுபாடுள்ள உயிர்களாய் இயங்குவதை அறிவோம். அது நமது பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கமாய் இருக்க, நாம் நமக்கே வகுத்துக் கொண்ட ஒரு மதிப்பீடாக மதம் என்ற ஒரு உடையை உடுத்தி, அதை மற்றவரையும் அணிய வைக்க முயல்கிறோம்.


மதத்தின் நற்கொள்கைகள் என்ற நம்பிக்கை நாம் பின்பற்ற முயல்வது. ஆனால் உண்மையில் ஒரு கொள்கையை பின் பற்றுவது என்பது அறிவார்த்த முறையில் கடினமான ஒரு காரியமாய் உலகியலில் இருப்பது ஏன் என்ற கேள்வியை நாம் கேட்க மறந்து விடுகிறோம். நல்ல காரியம் என மத ஆய்வாளர்கள் சொன்ன கருத்துக்களை நாம் சொல்வது ஒரு புறம் இருக்க அதை நாம் கடைப்பிடிக்கிறோமா என்பது ஒரு முக்கியமான கேள்வி.

மதங்கள் நல்லது செய்யச் சொல்கின்றன ஆனால் மற்றவரை தம் மதத்தில் சேர்க்கவும் என்று என்றும் சொல்லியதில்லை. மதவாதிகளின் ஆதரவாளர்களாய் உலகின் வெவ்வேறு அரசுகள் ஊட்டிய ஒரு இயக்கமாய் மதச்சேர்ப்பு இருந்தது என்று நம்பத் தோன்றுகிறது.

மனிதத்துவம் என்ற ஒரு கொள்கை இரக்க அடிப்படையில் அமைந்தது. ஆனால் மனிதன் என்ற சிந்தனைச் சிற்பி எண்ணங்களின் சிறப்பம்சம் வாய்ந்த ஒரு உயிர் என்ற அடிப்படையில் அவன் உருவாக்கிய வாழ்வியலாய் மதமும் அவனைத் தொடர, நல்ல கருத்துக்களை விட்டு விட்டு ஏதோ ஒரு காரணத்திற்காக சுயநல அடிப்படையில் மத வளர்ப்பில் மதம் கொண்டு அலையும் இனமாய் மாறினான்.

இன்று மதம் என்ற பெயரால் நடக்கும் கொலை வெறிக்கு என்ன பெயர் இடலாம் எனத் தெரியவில்லை. ஆசையை அகற்று என்ற புத்த மதத்தினர் ஆசையில்லாமல் இல்லை. தர்மம் தலை காக்கும் என்ற இந்து மதத்தினர் தர்ம காரியம் மட்டுமே செய்கின்றனரா? இஸ்லாமின் இனிமையை விட்டுவிட்டு ஏன் சில பயங்கரவாதிகள் இன்னல் தரும் செயல் புரிய வேண்டும்? கிறிஸ்துவம் என்ற அன்பு மொழி ஏன் அடையாளம் தேடி அலைய வேண்டும்?

இது போல் இன்னும் பல மதங்கள். மனிதனின் மதம், மத வெறி, ஒரு மிருகமாய் பிறக்கும் தன் சுயத்தை ஆராய்வதை விட்டுவிட்டு மனிதப்பிறவிக்கு அடையாளமாய் மதம் கொண்டு அலையும் இத்தன்மை என்று மாறும்?

மதம் நமக்குத் தேவையா?
மதம் சொன்ன நல்லவை மறந்து ஏன் நாம் இயங்குகிறோம்?
நம் வாழ்வின் அர்த்தத்தை மதம் தருகிறதா? அப்படித் தருகிறதெனில் ஏன்
கொலை வெறி?

உங்களில் அறிவுத்திறம் உள்ளவர்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வீர்களா?

பொதுவாக சினிமா, காதல், பாட்டு, புகழ் என்று அலைவது நம் இயல்பு. அதன் ஈர்ப்பு அணைவருக்கும் உண்டு என்றாலும், கொஞ்சம் மனிதம், மதம் பற்றியும் எண்ணுவீர்களா? எண்ணத்தை சொல்வீர்களா?

பட உதவி: www.alaska-in-pictures.com

Thursday, February 25, 2010

பெண்களுக்கு சம உரிமை....


பெண்ணுரிமை என்றால் என்ன? பெண்களுக்கு உரிமை என்ற ஒரு கோட்பாடு ஏன் அதிகமாகப் பேசப்படும் அளவு சமுதாயத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாக உள்ளது? பெண்கள் அந்த அளவு அடக்கி வைக்கப்பட்டிருந்தார்களா? இப்போது பெண்கள் உண்மையிலேயே உரிமை பெற்று வாழ்கிறார்களா?

மனித குலத்தில் ஆண், பெண் என்று இரு சம பாலினர் இருக்க, சமமான உரிமைகள் இயற்கையின் நியதிப்படி பெண்ணினத்திற்கு ஏன் அளிக்கப்படவில்லை? எதனால் பெண்கள் தம் உரிமையை இழந்தவர்களாய் இருந்தனர்? எந்த விசயங்களில் அவர்கள் உரிமை பறிக்கப்பட்டது அல்லது பறிக்கப்பட்டு வருகின்றது என்றெல்லாம் கேள்விகள் என் மனதில் எழும். அதைப் பற்றி சிந்தனை வயப்பட்டு, கேள்விகள் கேட்டு, கருத்துக்களை உண்மையின் பின்னணியில் ஆராயும் போது கவலைக்கிடமான பல நிகழ்வுகளின் சான்றுகள், நியாயமில்லாமல் இயங்கிய ஒரு சமுதாயத்தையும் பல கொடுமைகளைத் தாங்கி வாழ்ந்த மென்மையான பெண்ணினத்தின் வலிகளையும் காட்டும்.

பெண்ணுரிமை என்று நான் பேச விழைவது பெண்கள் மனிதரில் சம இனம் என்ற அடிப்படையிலேயே!

எனக்கு நினைவு தெரிந்த நாட்களின் முதல் அத்தியாயமான குழந்தைப் பருவத்தில் ஒரு முறை எனது தந்தை என் அம்மாவை அடித்து காலால் உதைத்த போது அவர் என் தம்பியின் கருவை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தார். என் தங்கையும் நானும் வேண்டாம்ப்பா என்று கத்திக் கதறி அப்பாவின் காலைப் பிடித்து அழுதோம். பின் விபரம் தெரிந்த நாட்களில் சிந்தித்த போது ஒன்று மட்டும் தெரிந்தது, அந்த வண்முறையான செயல் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை எவ்வளவு பாதித்திருக்கும் என்று.
நான் பார்த்ததெல்லாம் அவ்வளவு அடியையும் வாங்கிக் கொண்டு கண்ணீருடன் அமைதி காத்த என் தாய்தான். தன் பெற்றோர் வீட்டிற்கு சென்று வந்த ஒரே காரணம்தான் என் தந்தை எனது தாயாரைத் துண்புறுத்தியது. அடித்துத் துண்புறுத்தும் உரிமையை எனது அப்பாவிற்கு திருமணம் என்ற பந்தம் கொடுத்ததா, இல்லை அவ்வளவு அடியும் வாங்கி வலியைத் தாங்கும் பலத்தையும் அமைதியையும் என் அம்மாவிற்கு பெண்ணின் பொறுமையெனும் சக்தி கொடுத்ததா என்று எண்ணினேன்.

ஆனால் அந்நிகழ்வு, எங்கள் மனதை குழந்தையாய் இருக்கும் போது மிகவும் பாதித்த விசயம். இது போல் பலப்பல விடயங்கள் சமூகத்தில் நிகழ்கின்றன. பெண்களின் துயரம் சொல்லப்படாத சோகமாய் அப்படியே வாழ்கின்றது.

நமது நாட்டிலும் சரி, மேலை நாடுகளிலும் பெண்கள் முந்தைய கால கட்டத்தில் இருந்தே ஏதோ ஒரு விதத்தில் அடக்குமுறைக்கு உட்பட்டவர்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். ஆண் வர்க்கம் இயற்கையிலேயே பெண்களை விட உடற்ச்சக்தி கொண்டது என்ற ஒரு முதற் காரணமும் அந்தக் காலத்தில் வாழ்க்கைக்கு தேவையான பொருளைச் சம்பாதிப்பவர்களாய் ஆண்கள் மட்டுமே இருந்த காரணமும், ஆண்கள் பெண்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஏதுவாக இருந்திருக்கும் ஒரு யதார்த்தமாய் இருக்குமோ என்று எண்ணத் தோன்றியது.

மேலை நாடுகளில் பெண்ணுரிமை என்ற கோட்பாட்டை அரசு அங்கீகாரம் செய்ய எத்தனித்த காலகட்டத்தில் அதீதமான மாற்றங்களை பெண்கள் கண்டனர். பேச்சுரிமை, கல்வியுரிமை, செயலுரிமை போன்ற உரிமைக் காற்றின் வசதியுடன் வேகவேகமாய் பெண்கள் மாறிவிட்டனர். இந்த வேகம் அப்படியே மேல் நாடுகளில் மட்டும் ஏற்பட்டதே தவிர உலகின் ஏனைய பகுதிகளில் பெண்களின் நிலை இன்னும் பலப்பல வகைகளில் ஒரு கடினமான சோகத்தை தாங்கியே செல்கிறது.


நமது நாட்டிலும், இன்னும் சில நாடுகளிலும், நம் கண் முன் நிகழும் நிகழ்வுகளை அலசினாலே, ஆணாதிக்கத்தின் சுயநலத்தின் பின்னணியில் இயங்கும் ஒரு சமுதாய பிற்போக்குத்தனம் அப்பட்டமாகத் தெரியும்.


அந்நாளில் நோக்கினால், கணவன் இறந்தபின் உடன்கட்டை ஏறும் சதி, கணவன் இறந்த பின் வெள்ளையுடை அணிய வேண்டும், குங்குமம் வைத்து கொள்ளக்கூடாது என்ற கலாச்சாரக் கட்டுப்பாடுகள், பெண்களை குடித்துவிட்டு வந்து அடித்துத் துண்புறுத்தும் கணவன்மார் அட்டூழியம், மணைவியின் மனதிற்கு பிடித்ததைக் கேளாமல் பலவந்தப் படுத்தப்படும் நிலை, பெண்ணை ஒரு இச்சைப் பொருளாய் மட்டும் பயன்படுத்தும் மிருகத்தனம், மறுமணம் என்பதற்கு தடை, பெண் குழந்தைகளைக் கள்ளிப்பால் கொடுத்து கொன்ற ஏழ்மையின் கொடுரம், வரதட்சனை என்ற பெயரில் பேசப்படும் வியாபாரங்கள், வரதட்சனையின் பெயரால். பெண்களுக்கு இழைக்கப்படும் பயங்கரங்கள் என எவ்வளவோ கொடுமைகளை நமது இந்தியப் பெண் கண்ணீருடன் சுமந்தாள். சுமக்கிறாள்.

கல்வி மாற்றங்களைக் கொண்டு வந்தாலும், கலாச்சார சீர்முறை என்ற திரைக்குப் பின் சில விடயங்கள் பெண்களின் சுதந்திரத்தில் விலங்கு போடத்தான் செய்கிறது.

நாகரீக வளர்ச்சியில் மற்றும் அறிவார்த்தமான வளர்ச்சியில் தற்போது நிலைமை நகரங்களில் ஓரளவு மாறிவந்தாலும், சில நல்ல சமூக நல இயக்கங்களால் சிறந்த விழிப்புணர்வு ஏற்பட்டு வந்தாலும், கிராமப்புறங்களில், இல்லம்தோறும் செலுத்தும் நுண்ணோக்கில் பெண்கள் இன்னும் பல சொல்ல முடியாத அவலங்களையும் துயரங்களையும் சந்தித்து வருவதை நாம் அறிவோம்.


இந்தியாவின் மகளிர் பல அரிய சாதனைகளை நவீன காலகட்டத்தில் செய்தாலும் பலரின் அன்றாட வாழ்வில் மனித உரிமைகளை , ஒரு பரஸ்பர நல்லுணர்வை, நம் குடும்பத்தினரே காட்டாததை அறிவோம்.

பரம்பரைச் சொத்தில் அக்காவுக்கோ, தங்கைகோ ஒரு பாகம் உண்டு என்றால் அதைக் கொடுக்கக் கூட மறுக்கும் சகோதரர்கள் வாழும் நிலையைக் கண்டிருக்கிறேன். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு என்ற ஒரு மசோதாவை எதிர்த்து நின்ற ஆணினம் இந்தியாவில் பெண்களுக்கு கொடுக்கப்படும் உரிமை மறுப்புகள் என இன்னும் நம் நாட்டில் ஆணாதிக்க மனப் பக்குவத்தைக் காட்டுகிறது.

உரிமை என்பது சுதந்திரம் என்றால் கட்டுப்பாடுகள் அற்ற போக்கும் சரியல்லவே! ஆனால் மனிதாபமான அளவில் கூட பெண்ணினத்திற்கு அது வழங்கப் படாத போது ஒரு நல்ல மனிதனாய் சிந்தித்துப் பார்த்து கேட்ட கேள்வி....பெண்ணுரிமை என்றால் என்ன? பெண்கள் அதை எப்படிப் பெற்றால் ஒரு நல்ல சமுதாயம் உருவாகும் என்பதை எண்ணி, அதை உங்கள் மூலம் கேட்க விழைகிறேன்.

நீங்கள் ஒரு ஆணாயிருந்து இதைப் படிக்க நேரிட்டால், பெண்களுக்கு நல்லுரிமை வழங்க என்ன ஆவன செய்வீர்கள்? நீங்கள் ஒரு பெண்ணாயிருந்து இதைப் படிக்க நேரிட்டால், நான் விட்டுவிட்ட விசயங்களைக் கூறலாம். பெண்கள் சம உரிமை பெற்ற வீட்டின் நிலை, மற்றும் நாட்டின் நிலை எப்படி இருக்கும்?

நண்பர்களே சொல்வீர்களா?


முகில்.
photo courtesy: http://indianterrorism.bravepages.com/

Saturday, February 13, 2010

நட்பின் ரூபம்.


இரண்டு நாட்களுக்கு முன் ஒரு தோழியிடம் இருந்து வலைப் பேச்சுப் பலகையில் ஹலோ என்று எழுத்துக்கள் தோன்றின. இவரிடம் சில நாட்களே பேசியிருந்தாலும் பல நாட்களாய் பழகிய மனப்பரிச்சயம். அதாவது அவ்வளவு அந்நியோன்னியமான ஓர் உணர்வு இருக்கும். திடீரென்று காணாமல் போய் விடுவார். எத்தனையோ முறை பேசவேண்டும் என்ற உணர்வு ஏற்படும் போதெல்லாம் நான் வலையின் மூலமாகத் தொடர்பு கொண்டிருக்கிறேன். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல் எந்த சலனமும் இல்லாது தூரக்கடலில் தொலைந்த உணர்வுகளாய் போய்விடும்.

இவரை வலையில் பார்த்தவுடன், என்னையறியாமல் எனது கைகள் குசலம் விசாரிக்க எழுத்துக்களை அள்ளிவீசும். எனது வாழ்வில் மிகவும் மனம் புண்பட்டு சோர்வாயும் சோகமாயும் அன்று இருந்த என் நிலையில் இவரைப் பார்த்ததும் அந்த சோகத்தை மறந்து விட்டு, அன்றும் அப்படித்தான் குசலம் விசாரிக்க முயல ஆரம்பித்து அதற்கு அவர் பதில் சொல்லாமலும் போகலாம் என்று அனுமானமும் செய்கையில், அவரே ஹலோ என்றதும் மிக்க மகிழ்வடைந்தேன். சௌக்கியமா என்று கேட்ட போது இல்லிங்க...இன்னிக்கு கொஞ்சம் மனசு சரியில்ல, அதான் உங்களோட பேசலாம்னு தோனுச்சு....என்றார். அப்போதுதான் காணாமல் இருந்தாலும், பேசாமல் இருந்தாலும், அவர் என் மீது ஒரு ஆழமான நம்பிக்கை வைத்திருந்தார் என்று தெரிந்து கொண்டேன்.

அவர் மனசு சரியில்லிங்க என்று சொன்னதுமே ஒரு இரக்க உணர்வு என்னுள் தோன்றியது. பாவம் என்ன கவலையோ என்று மனம் எண்ணிக் கொள்ள அவரிடம் என்ன ஆச்சு சொல்லுங்க, என்னாலான உதவி ஏதேனும் உண்டா, ப்ளிஸ் சொல்லுங்க என்றேன்.

நிறைய விசயங்கள்....சரி ஒன்னொன்னா சொல்றேன் என்றார். இவற்றை இணையதள பேச்சறையில் எழுதினால் மனதின் ஒரு அண்மை இருக்காது என்று உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் உங்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாமா என்றேன். அவரது தொலைபேசி எண்ணையும் கொடுத்தார்.

முதல் முறையாய் அவரிடம் தொலைபேசியில் பேசப்போகிறேன் என்ற எண்ணம் வராத உறவு போல் என்னுள் ஒரு உணர்வு. அவர் துடுக்குத்தனமாகவும் பேசக் கூடியவர். மிகவும் இயல்பு நிலை அறிந்தவர். தொலைபேசியில் எண்களை சொடுக்கிய சில வினாடிகளில், அவர் குரல் கேட்டவுடன் அந்தக் குரலிலும் ஒரு பரிச்சயம். முதன்முதலில் பேசும் வாய்ப்புக்கு மகிழ்வு கூறி, என்ன விபரம் என்று கேட்டேன்.

நிறைய நடந்துடுச்சு. என்னோட உயிரா இருந்த என் "ப்ரூனோ" செத்துப் போச்சு என்றார். ப்ரூனோ அவரது நாய். இரண்டு நாட்களுக்கு முன் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமணை சென்ற ப்ரூனோ வரவேயில்லை. மருத்துவர்கள் அதை விட்டுச்செல்லக் கூறினர். எனக்கு மனசே இல்லை. ப்ரூனோ கூட வேண்டாம் என்று என்னிடம் சொல்லியது ஆனால் தப்பு பண்ணிட்டனோன்னு தோனுது என்றவர் குரலில் ஒரு விரக்தி தெரிந்தது. அது மட்டுமில்ல, இரண்டு நாய் குட்டிங்க ரோட்டுக்கு ஓடிப்போய், வண்டி ஏறி இறந்துடுச்சுங்க...கடைசியா இருந்த குட்டியை, ப்ளூ க்ராஸ் கொண்டு போய்ட்டாங்க. அதை நினைச்சு ரொம்பக் கவலை. அவருடைய மென்மையான மனமும் அதில் ஏற்பட்ட காயத்தின் வலியும் பல ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் இதுவரை பேசாத ஒரு நபரை அழைத்துப் பேசும் அளவு வாட்டியிருந்ததை உணர்ந்தேன்.

எனது மனமும் அவர் போல்தான் என்று எனக்குத் தெரியும். நான் ஒரு ஆண்மகன், அவர் ஒரு பெண் என்றாலும் கண்களில் கசிவு வரத்தான் செய்தது. அவரது அந்த நிலையில் அவரை ஆறுதல் படுத்த முயன்றேன். என் நிலையை விட்டுவிட்டு வாழ்வியலின் யதார்த்தத்தை பக்குவமாகச் சொல்ல முயன்றேன். விபரங்களை விலாவரியாகக் கேட்டேன். ஒவ்வொன்றாய் அவர் சொல்லச் சொல்ல என்னையும் அதில் ஒப்பிட்டு என் வாழ்வில் நடந்த சில விசயங்களையும் பேசப் பேச ஒரளவு அவரின் மனதின் வலி குறைந்தது போல் உணர்ந்தேன். அவரிடம் பேசிய அந்தக் கணங்களின் அன்பு என் மனதின் சோகத்தையும் கொஞ்சம் குறைத்தது போல் உணர்ந்தேன்.

சற்று நேரம் பேசிய பின், அவரை அதையே எண்ணிக் கவலைப் படாமல் இருக்க வேண்டிவிட்டு, கொஞ்சம் காஃபி சாப்பிட்டு விட்டு பாடல்களை கேட்கக் கூறினேன். கதவுகளைத் திறந்து கொஞ்சம் வெளிச்சத்தையும், காற்றையும் அனுபவிக்கக் கூறினேன். சிறு பிள்ளைக்கு சொன்னால் தலையாட்டுவது போல் அவர் சரி, சரி என்றார். அவருடன் பேசிக் கொண்டேயிருக்கலாம் ஆனால் நான் அலுவலகப் பணியில் இருந்தேன். ஆகவே மன்னிப்பு வேண்டிவிட்டு பிரியாவிடை பெற்றேன்.

அவரும் மறுபடி முடிந்தால் அவரை அழைக்கக் கூறினார். சரியென்று சொல்லிவிட்டு அகன்றேன். அவருடன் பேசிய நிமிடங்கள் எங்கிருந்தோ வந்த தேவதையின் அழைப்பு போல் அவர் மனம் சரியில்லாமல் போன கஷ்டங்களைப் பகிர்ந்து கொண்டாலும், என் மனதில் மண்டியிருந்த சோகத்தையும் அழுத்தத்தையும் குறைத்தது கண்டு ஆச்சர்யம் கொண்டேன்.

எதிர்பாராமல் நடந்த அந்நிகழ்வு, தெய்வாதீனமாய் நடந்தது போல் உணர்ந்தேன்.
நம்பிக்கை என்பது ஒரு அன்புணர்வாகவும் அமையலாம் என்று அப்போது தெரிந்து கொண்டேன். பொதுவாகவே எல்லாரிடமும் அன்பு செயல் வேண்டும் என்று முயலும் எனக்கு அவரிடம் பகிர்ந்து கொண்ட அந்த நிமிடங்கள் ஒரு வரம் போல் இருந்தது. உணர்வுகளின் சக்தியும், உறவுகளின் உன்னதமும் எந்த நிமிடத்திலும் நமக்கு வரலாம். அந்த உறவுகள் தரும் மகிழ்ச்சி, நம்மை இழந்த நம்பிக்கையை மீட்டுத்தரும் வரப்பிரசாதமாகவும் அமையலாம்.

அர்த்தங்களில் அடிப்படையில் அமையும் நமது வாழ்க்கைக்கு நல்ல உறவுகள் முக்கியம். அது எங்கிருந்து வேண்டுமானாலும் எப்படியும் வரலாம் அதை மதிப்பதும், மனதில் வைத்துப் போற்றுவதும், நல்ல நட்பையும், அந்த நல்ல நட்பால் வரக்கூடிய சக்தியையும் அறிய வைக்கும்.

அதற்குப் பின் அவரிடம், அவ்வப்போது பேசினேன். அந்த நட்பு, இன்னும் என் சோகங்களுக்கு இடும் மருந்தாய் இருப்பதை உணர்ந்தேன். ஒரு சுகம் என்றும் அறிந்தேன்.

நட்பின் உண்மை உணர்வுகளில் இருக்கும். அந்த உணர்வுகளை மதிக்கவும், அதன் நிழலில் அமைதி காணும் சுகத்தையும் நல்ல நட்புள்ளங்கள் அறியும். இனிமையான இந்த நட்பு கண்டும் காணாததாய், இருந்தும் இல்லாததாய், அறிந்தும் அறியாததாய், வாழ்க்கை சூழ்நிலைகளில் சாயம் பூசிக் கொண்டாலும், ஒரு உண்மையின் தேடலாய் இருப்பது என்பதையும் உணர்கிறேன்.

நண்பர்களே, நல்ல நட்பு என்பது தேடியும் கிடையாதது. அது அருகிலிருக்கும் தெய்வம் போல்... நட்பு செய்யுங்கள்...நட்பை மதியுங்கள்....நட்பு என்பது ஒரு நல்ல உள்ளத்தின் வரைய முடியாத பரிமாணம்....
வாழ்க நட்பு! வாழ்க நண்பர்கள்!

முகில்...

நன்றி: நிழற்பட உதவி: glogster.com

Thursday, February 11, 2010

தெய்வத்தை உதைக்கலாமா?


தெய்வத்தை உதைக்கலாமா?

என்னடா இது கேள்வியே சரியில்லையே என்று எண்ணுகிறீர்களா? நான் தெய்வம் என்று சொல்வது குழந்தைகளைப் பற்றிங்க...குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பது சரியா இல்லையா?


உள்ளதை உள்ளபடி பேசும் குணம் குழந்தைகள் இயல்பு. குழந்தைகள் பிறப்பில் அப்படியே! வாக்கெல்லாம் நல்வாக்கு, உண்மை. அதனால் அந்த மன நிலையை புனிதமான தெய்வத்திற்கு ஒப்பிடுகிறோம்.


இயற்கையான மிருக குணங்கள் என்பது நமது இரத்தத்தில் கலந்த விசயம். அவற்றை மீறி கருணை என்ற ஒரு இரக்க குணத்தையும் நாம் எப்படிக் கொண்டோம் என்று பார்க்கும் போது அதுவே தெய்வ குணம் என்றும் கூறலாம். அன்பே தெய்வம் என்று கூறும் போது குழந்தைகள் நம் மீது மிக அதிக அளவில் அன்பு வைக்கும் தெய்வங்கள் என்றும் கூறலாம்.

குழந்தைகளை அடிக்கலாமா என்பதுதான் எனது ஆராய்ச்சி. எதனால் அந்த சூழ்நிலை ஏற்படுகிறது? ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் ஒரு மாதிரி குடும்பம் என்று எனது குடும்பத்தையே எடுத்துப் பார்த்த போது சிந்தனை பலவாறு ஓடியது.


நடைமுறை வாழ்வில் இந்த தெய்வங்கள் பெரியவர்கள் கொடுக்கும் அடியில் இருந்து தப்பிக்க இயலாது. ஆரம்பத்தில் என் தங்கமே, என் குலம் ஆள வந்த ராஜாவே என்றேல்லாம் கொஞ்சி மகிழும் நாம், மெல்ல மெல்ல நமது கோபத்தை குழந்தைகளின் மேல் காட்ட ஆரம்பிக்கிறோம்.


குழந்தைகளின் மீது நமது பழக்கவழக்கங்கள், மனோபாவம், மற்றும் குதர்க்கமான நம்பிக்கைகள் போன்றவற்றை நாமே திணிக்கிறோம். ஒரு தெய்வம் மெல்ல மெல்ல சாதாரணமான மனிதப் பிறவியாய் மாற பெரியவர்களே காரணம். நானே குழந்தைகளை அடித்திருக்கிறேன் பின்னர் வருந்தியும் உள்ளேன்.


குழந்தைகள் தாம் வாழும் சுற்றுச்சூழலிருந்தும், தம் குடும்பத்திலிருந்தும் தமது வாழ்க்கை அனுபவங்களையும், அதன் படி செயலாக்கங்களையும் கற்கின்றன. நல்ல பழக்கங்கள் என்று நாம் சொல்லக்கூடிய புத்தகப் பழக்கங்கள், நாம் அதைக் கடைப் பிடித்தால்தானே குழந்தைகளும் கடைப்பிடிக்கும். குறிப்பாக நாம் உண்மையே பேசவேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறோம், ஆனால் யாராவது தொலைபேசி மூலம் அழைத்தால் அம்மா பாத்ரூமில் இருக்காங்க என்று சொல்லு என்று ஒரு பொய்யை அறிமுகப் படுத்தும் போது, அந்தக் குழந்தை மனதில் பொய் சொல்வதை வித்திடுகிறோம். திருடக் கூடாது என்று சொல்லித் தந்து விட்டு கணவன் பர்ஸில் இருந்து கொஞ்சம் பணத்தை அவ்வப்போது குழந்தைகள் முன் எடுக்கும் (அன்போடும் உரிமையோடும் எடுத்தாலும்) ஒரு மனைவி, திருடுவதைச் சொல்லித் தருகிறாள்.

ஒற்றுமையாய் வாழவேண்டும் என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் கணவன் மனைவிக்கிடையே நடக்கும் ஒரு யுத்தம் குழந்தைகளை மிகவும் புண்படுத்தும். அப்படி கணவன் மனைவி சண்டை போட்டுக் கொள்ளும் போது அன்பாய் பேச வேண்டும் என்கிற நாம், பிஞ்சு உள்ளங்களில் விஷம் ஏற்றுகிறோம். அப்படி ஒரு சண்டை வராமல் இருக்கும் சூழ்நிலைகளை பெற்றோர் உண்டாக்க வேண்டும் அல்லது அவர்கள் கேட்காத போது பேசித் தீர்க்கவேண்டிய விசயமாக்கிக் கொள்ள வேண்டும்.

இப்படியாய் பல உதாரணங்களை நாம் அடுக்கலாம். மனோதத்துவ ரீதியில், இது போன்று வீட்டிலோ,வெளியிலோ நடக்கும் பல விசயங்கள் குழந்தைகளின் வாழ்வியலை, வளர்ச்சியை, மனப்பாங்கை, அவர்கள் நடந்து கொள்ளும் முறைகளை பாதிக்கும்.

அன்பாய்ப் பேசவேண்டும் என்றால் குழந்தைகளை அன்பான சூழ்நிலையில் வளருங்கள்.
உண்மை பேசவேண்டும் என்றால் குழந்தைகள் முன் உண்மை பேசிப் பழக்குங்கள்.
திருடக் கூடாது என்றால், குழந்தைகள் முன் திருடு போல் செய்யும் சிறு விஷயங்களைக் கூடத் தவிருங்கள்.
வன்முறை கூடாது என்றால் சண்டைகள் போடுவது, அடிப்பது, பொருட்களை உடைப்பது போன்ற வன்முறைகளைத் தவிருங்கள்.
மது அருந்துவது தவறு என்பது தெரிந்தும், குழந்தைகள் முன் மது அருந்தும் தகப்பன் செய்ய்யும் செயல்களைத் தவிருங்கள்.

ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை உருவாக்க ஆரோக்கியமான எண்ணம் உள்ள பெற்றோர் வேண்டும். தாம் விரும்புவது என்று தொலைக்காட்சிப் பெட்டி முன் உட்கார்ந்து வாழ்நாள் முழுதும் கழிக்கும் குடும்பங்களையும் நான் பார்த்துள்ளேன். அவர்கள் பார்க்கும் நாடகங்களில் வரும் வில்லிகள், ஒருவரைப் பழிவாங்குவது எப்படி என்றலையும் பாத்திரங்கள், குழந்தைகளுக்கும் காட்சிகள் மூலம் வன்முறையைக் கற்பிக்கின்றன. நல்ல குழந்தைகள் உருவாக, நல்ல பெற்றோர்கள் முதலில் வேண்டும்.

இது முதல் படி. வெளியே சென்று நடைமுறை வாழ்க்கையில் குழந்தைகள் பார்த்துக் கற்கும் விசயங்கள் அவர்கள் மனதைப் புடம் போடும் போது, அடிப்படையாய் நமக்குத் தேவை என்ன என்பதை நல்ல பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். அப்படிப் பட்ட பெற்றோர்கள் நிறைந்த சமுதாயம், கட்டாயம் நல்ல வித்துக்களை, நல்ல விருட்சங்களாய் மாற்றுகின்றனர்.

நல்ல சமுதாயம், நாம் ஏற்படுத்துவதுதானே! வானத்தில் இருந்து பரிசாய் ஒரு நல்ல சமுதாயம் வர முடியுமா? நாளைய நல்ல சந்ததி வளர, நமது குழந்தைகள் நல்ல எண்ணங்களுடன் தெய்வங்கள் போல் ஒளிர வழி செய்வது பெற்றோர்களே உங்கள் மனதிலும் செயலிலும் உள்ளது.

குழந்தை தெய்வங்களை அடித்து அவர்கள் மனங்களைப் புண்படுத்தலாகாது. பெரியவர்கள் மாறவேண்டும். அன்பு, பண்பு, பாசம், அடக்கம், பொய் பேசாமை, திருடாமை, நல்லொழுக்கம், போன்றவற்றை பெற்றோர்கள் கொள்ளவேண்டும்.

ஒரு மாற்றத்தை உண்டாக்க, முதலில் நீங்கள் அந்த மாற்றத்தை மேற்கொள்ளுங்கள் என்று சொன்ன காந்தியின் வாக்கு, எந்நாளும் கடைப்பிடிக்க வேண்டியது.

என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே?

புகைப்படம்: Climatechangecorp

Sunday, February 7, 2010

பெற்றோர்களை உதறும் புது உலகம்!


பிரியமான தோழர்களே...

மாறிவரும் நவநாகரிக உலகில் மனிதத்துவமும் குறைந்து கொண்டே வருகிறது. இயந்திர வாழ்க்கை வாழ்கிறோம் என்ற பெயரில் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். பிள்ளைகளைப் பெற்று, உணவு புகட்டி, கல்வி புகட்டி, சகல தைரியங்களும் தந்து வளர்த்து அவர்கள் வளர்ச்சியில் மகிழும் பெற்றோர்களை, இன்றைய உலகம் உதறித் தள்ளுவது நாமெல்லாம் கண்கூடாகப் பார்க்கின்ற விசயம். ஏன் உங்களில் பலர் அப்படியும் இருக்கலாம். ஆனால் வயதில் முதிர்ந்து குழந்தைகள் போல் தள்ளாடி, அன்புக்கு ஏங்கும் பெரியவர்களைப் பாரமாக எண்ணி அவர்களை மதியாமல் நடப்பதும், வீட்டை விட்டு வெளியே வசிக்கச் செய்யும் நம்மில் பலர் செய்வது சரியா என்று எண்ணிப் பார்த்தது உண்டா?

இந்தியாவில் ஏறத்தாழ 80 மில்லியன் வயோதிகர்ள் உதாசீனப் படுத்தப்பட்டுள்ளனர். தமது பிள்ளைகள் தம்மை உதறித்தள்ளுவார்கள் என்று அவர்கள் எந்நாளும் நினைத்திருக்க மாட்டார்கள்.

அவர்களில் பலர் தெருக்களிலும், வயோதிகர் இல்லங்களிலும், எங்கு வசதிப் படுகிறதோ அங்கு அண்டுவதற்கு இடம் தேடவேண்டிய நிர்பந்ததிற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

அதிலும் 55% பெண்கள் 60 வயதைக் கடந்தவர்கள். கணவனை இழந்து விதவையானவர்கள்.

ஆழமாக நோக்கினால், சுயநலமும், சந்தர்ப்ப சூழ்நிலைகளின் உந்துதலும் வாழ்க்கைச் சக்கரத்தில் சுற்றும் நம்மில் பலரையும் அப்படியொரு நிலைமைக்கு உள்ளாக்குகிறது என்றும் எண்ணத் தோன்றுகிறது. ஆனால் மனிதாபிமானத்திற்கும், பரஸ்பர அன்பிற்கும் இடமில்லாத இதயம் ஒரு இயந்திரத்திற்கு சமமாகும். இன்று நாம் செய்யும் தவறு நாளை நம்மையும் அதே நிலைக்கு உள்ளாக்கும் என்பதை நாம் மறக்கக் கூடாது. நமது பிள்ளைகள் வருங்காலத்தில் நம்மில் அன்பு வைக்காமல் போக நாம் இடும் வித்தே காரணம் என்பதை நாம் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நாம் மாறி வருகிறோம் என்பது உண்மை. என்னதான் மாற்றங்கள் காலத்தாலும் மாறும் மனப்போக்காலும் ஏற்பட்டாலும், நம்மைப் பெற்றவர்களைப் பாதுகாப்பது நமது கடமை என்பதை மறக்கலாமா?

கல்யாணமாகி கணவன் வீடு புகுந்தவுடன், ஒரு பெண் அந்த வீட்டுச் சொத்து போல், தனது தாய் தந்தையை மறக்க வேண்டும் என்பது கிடையாது. அது போல் தன் மாமா மாமியாரையும் ஒரு அப்பா அம்மா போல் மதிக்கும் குணம் மருமகன்களுக்கும் வரவேண்டும்.

எந்தப் பெற்றோருக்கு உதவி தேவையோ அதை செய்யவேண்டிய கடமை அணைவருக்கும் உள்ளது. வயது முதிர்ந்து அன்பு தேடும் பெரியவர்களை, குழந்தைகள் போல் எண்ணி, அவர்களிடம் அன்பு செய்வது மிக முக்கியம். தம் வாழ்நாளில் இன்னும் எவ்வளவு மீதம் உள்ளது என்று தெரியாமல் வாழும் அவர்களுக்கு நாம் பிள்ளைகளாகச் செய்யும் கைமாறு அதுதான் ஆகும்.

என்ன நண்பர்களே, நான் சொல்வதை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா?

முகில்

(புகைப்படம் உதவி: வாஷிங்க்டன் போஸ்ட்)