Thursday, February 25, 2010

பெண்களுக்கு சம உரிமை....


பெண்ணுரிமை என்றால் என்ன? பெண்களுக்கு உரிமை என்ற ஒரு கோட்பாடு ஏன் அதிகமாகப் பேசப்படும் அளவு சமுதாயத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாக உள்ளது? பெண்கள் அந்த அளவு அடக்கி வைக்கப்பட்டிருந்தார்களா? இப்போது பெண்கள் உண்மையிலேயே உரிமை பெற்று வாழ்கிறார்களா?

மனித குலத்தில் ஆண், பெண் என்று இரு சம பாலினர் இருக்க, சமமான உரிமைகள் இயற்கையின் நியதிப்படி பெண்ணினத்திற்கு ஏன் அளிக்கப்படவில்லை? எதனால் பெண்கள் தம் உரிமையை இழந்தவர்களாய் இருந்தனர்? எந்த விசயங்களில் அவர்கள் உரிமை பறிக்கப்பட்டது அல்லது பறிக்கப்பட்டு வருகின்றது என்றெல்லாம் கேள்விகள் என் மனதில் எழும். அதைப் பற்றி சிந்தனை வயப்பட்டு, கேள்விகள் கேட்டு, கருத்துக்களை உண்மையின் பின்னணியில் ஆராயும் போது கவலைக்கிடமான பல நிகழ்வுகளின் சான்றுகள், நியாயமில்லாமல் இயங்கிய ஒரு சமுதாயத்தையும் பல கொடுமைகளைத் தாங்கி வாழ்ந்த மென்மையான பெண்ணினத்தின் வலிகளையும் காட்டும்.

பெண்ணுரிமை என்று நான் பேச விழைவது பெண்கள் மனிதரில் சம இனம் என்ற அடிப்படையிலேயே!

எனக்கு நினைவு தெரிந்த நாட்களின் முதல் அத்தியாயமான குழந்தைப் பருவத்தில் ஒரு முறை எனது தந்தை என் அம்மாவை அடித்து காலால் உதைத்த போது அவர் என் தம்பியின் கருவை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தார். என் தங்கையும் நானும் வேண்டாம்ப்பா என்று கத்திக் கதறி அப்பாவின் காலைப் பிடித்து அழுதோம். பின் விபரம் தெரிந்த நாட்களில் சிந்தித்த போது ஒன்று மட்டும் தெரிந்தது, அந்த வண்முறையான செயல் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை எவ்வளவு பாதித்திருக்கும் என்று.
நான் பார்த்ததெல்லாம் அவ்வளவு அடியையும் வாங்கிக் கொண்டு கண்ணீருடன் அமைதி காத்த என் தாய்தான். தன் பெற்றோர் வீட்டிற்கு சென்று வந்த ஒரே காரணம்தான் என் தந்தை எனது தாயாரைத் துண்புறுத்தியது. அடித்துத் துண்புறுத்தும் உரிமையை எனது அப்பாவிற்கு திருமணம் என்ற பந்தம் கொடுத்ததா, இல்லை அவ்வளவு அடியும் வாங்கி வலியைத் தாங்கும் பலத்தையும் அமைதியையும் என் அம்மாவிற்கு பெண்ணின் பொறுமையெனும் சக்தி கொடுத்ததா என்று எண்ணினேன்.

ஆனால் அந்நிகழ்வு, எங்கள் மனதை குழந்தையாய் இருக்கும் போது மிகவும் பாதித்த விசயம். இது போல் பலப்பல விடயங்கள் சமூகத்தில் நிகழ்கின்றன. பெண்களின் துயரம் சொல்லப்படாத சோகமாய் அப்படியே வாழ்கின்றது.

நமது நாட்டிலும் சரி, மேலை நாடுகளிலும் பெண்கள் முந்தைய கால கட்டத்தில் இருந்தே ஏதோ ஒரு விதத்தில் அடக்குமுறைக்கு உட்பட்டவர்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். ஆண் வர்க்கம் இயற்கையிலேயே பெண்களை விட உடற்ச்சக்தி கொண்டது என்ற ஒரு முதற் காரணமும் அந்தக் காலத்தில் வாழ்க்கைக்கு தேவையான பொருளைச் சம்பாதிப்பவர்களாய் ஆண்கள் மட்டுமே இருந்த காரணமும், ஆண்கள் பெண்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஏதுவாக இருந்திருக்கும் ஒரு யதார்த்தமாய் இருக்குமோ என்று எண்ணத் தோன்றியது.

மேலை நாடுகளில் பெண்ணுரிமை என்ற கோட்பாட்டை அரசு அங்கீகாரம் செய்ய எத்தனித்த காலகட்டத்தில் அதீதமான மாற்றங்களை பெண்கள் கண்டனர். பேச்சுரிமை, கல்வியுரிமை, செயலுரிமை போன்ற உரிமைக் காற்றின் வசதியுடன் வேகவேகமாய் பெண்கள் மாறிவிட்டனர். இந்த வேகம் அப்படியே மேல் நாடுகளில் மட்டும் ஏற்பட்டதே தவிர உலகின் ஏனைய பகுதிகளில் பெண்களின் நிலை இன்னும் பலப்பல வகைகளில் ஒரு கடினமான சோகத்தை தாங்கியே செல்கிறது.


நமது நாட்டிலும், இன்னும் சில நாடுகளிலும், நம் கண் முன் நிகழும் நிகழ்வுகளை அலசினாலே, ஆணாதிக்கத்தின் சுயநலத்தின் பின்னணியில் இயங்கும் ஒரு சமுதாய பிற்போக்குத்தனம் அப்பட்டமாகத் தெரியும்.


அந்நாளில் நோக்கினால், கணவன் இறந்தபின் உடன்கட்டை ஏறும் சதி, கணவன் இறந்த பின் வெள்ளையுடை அணிய வேண்டும், குங்குமம் வைத்து கொள்ளக்கூடாது என்ற கலாச்சாரக் கட்டுப்பாடுகள், பெண்களை குடித்துவிட்டு வந்து அடித்துத் துண்புறுத்தும் கணவன்மார் அட்டூழியம், மணைவியின் மனதிற்கு பிடித்ததைக் கேளாமல் பலவந்தப் படுத்தப்படும் நிலை, பெண்ணை ஒரு இச்சைப் பொருளாய் மட்டும் பயன்படுத்தும் மிருகத்தனம், மறுமணம் என்பதற்கு தடை, பெண் குழந்தைகளைக் கள்ளிப்பால் கொடுத்து கொன்ற ஏழ்மையின் கொடுரம், வரதட்சனை என்ற பெயரில் பேசப்படும் வியாபாரங்கள், வரதட்சனையின் பெயரால். பெண்களுக்கு இழைக்கப்படும் பயங்கரங்கள் என எவ்வளவோ கொடுமைகளை நமது இந்தியப் பெண் கண்ணீருடன் சுமந்தாள். சுமக்கிறாள்.

கல்வி மாற்றங்களைக் கொண்டு வந்தாலும், கலாச்சார சீர்முறை என்ற திரைக்குப் பின் சில விடயங்கள் பெண்களின் சுதந்திரத்தில் விலங்கு போடத்தான் செய்கிறது.

நாகரீக வளர்ச்சியில் மற்றும் அறிவார்த்தமான வளர்ச்சியில் தற்போது நிலைமை நகரங்களில் ஓரளவு மாறிவந்தாலும், சில நல்ல சமூக நல இயக்கங்களால் சிறந்த விழிப்புணர்வு ஏற்பட்டு வந்தாலும், கிராமப்புறங்களில், இல்லம்தோறும் செலுத்தும் நுண்ணோக்கில் பெண்கள் இன்னும் பல சொல்ல முடியாத அவலங்களையும் துயரங்களையும் சந்தித்து வருவதை நாம் அறிவோம்.


இந்தியாவின் மகளிர் பல அரிய சாதனைகளை நவீன காலகட்டத்தில் செய்தாலும் பலரின் அன்றாட வாழ்வில் மனித உரிமைகளை , ஒரு பரஸ்பர நல்லுணர்வை, நம் குடும்பத்தினரே காட்டாததை அறிவோம்.

பரம்பரைச் சொத்தில் அக்காவுக்கோ, தங்கைகோ ஒரு பாகம் உண்டு என்றால் அதைக் கொடுக்கக் கூட மறுக்கும் சகோதரர்கள் வாழும் நிலையைக் கண்டிருக்கிறேன். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு என்ற ஒரு மசோதாவை எதிர்த்து நின்ற ஆணினம் இந்தியாவில் பெண்களுக்கு கொடுக்கப்படும் உரிமை மறுப்புகள் என இன்னும் நம் நாட்டில் ஆணாதிக்க மனப் பக்குவத்தைக் காட்டுகிறது.

உரிமை என்பது சுதந்திரம் என்றால் கட்டுப்பாடுகள் அற்ற போக்கும் சரியல்லவே! ஆனால் மனிதாபமான அளவில் கூட பெண்ணினத்திற்கு அது வழங்கப் படாத போது ஒரு நல்ல மனிதனாய் சிந்தித்துப் பார்த்து கேட்ட கேள்வி....பெண்ணுரிமை என்றால் என்ன? பெண்கள் அதை எப்படிப் பெற்றால் ஒரு நல்ல சமுதாயம் உருவாகும் என்பதை எண்ணி, அதை உங்கள் மூலம் கேட்க விழைகிறேன்.

நீங்கள் ஒரு ஆணாயிருந்து இதைப் படிக்க நேரிட்டால், பெண்களுக்கு நல்லுரிமை வழங்க என்ன ஆவன செய்வீர்கள்? நீங்கள் ஒரு பெண்ணாயிருந்து இதைப் படிக்க நேரிட்டால், நான் விட்டுவிட்ட விசயங்களைக் கூறலாம். பெண்கள் சம உரிமை பெற்ற வீட்டின் நிலை, மற்றும் நாட்டின் நிலை எப்படி இருக்கும்?

நண்பர்களே சொல்வீர்களா?


முகில்.
photo courtesy: http://indianterrorism.bravepages.com/

1 comment: