Sunday, February 7, 2010

பெற்றோர்களை உதறும் புது உலகம்!


பிரியமான தோழர்களே...

மாறிவரும் நவநாகரிக உலகில் மனிதத்துவமும் குறைந்து கொண்டே வருகிறது. இயந்திர வாழ்க்கை வாழ்கிறோம் என்ற பெயரில் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். பிள்ளைகளைப் பெற்று, உணவு புகட்டி, கல்வி புகட்டி, சகல தைரியங்களும் தந்து வளர்த்து அவர்கள் வளர்ச்சியில் மகிழும் பெற்றோர்களை, இன்றைய உலகம் உதறித் தள்ளுவது நாமெல்லாம் கண்கூடாகப் பார்க்கின்ற விசயம். ஏன் உங்களில் பலர் அப்படியும் இருக்கலாம். ஆனால் வயதில் முதிர்ந்து குழந்தைகள் போல் தள்ளாடி, அன்புக்கு ஏங்கும் பெரியவர்களைப் பாரமாக எண்ணி அவர்களை மதியாமல் நடப்பதும், வீட்டை விட்டு வெளியே வசிக்கச் செய்யும் நம்மில் பலர் செய்வது சரியா என்று எண்ணிப் பார்த்தது உண்டா?

இந்தியாவில் ஏறத்தாழ 80 மில்லியன் வயோதிகர்ள் உதாசீனப் படுத்தப்பட்டுள்ளனர். தமது பிள்ளைகள் தம்மை உதறித்தள்ளுவார்கள் என்று அவர்கள் எந்நாளும் நினைத்திருக்க மாட்டார்கள்.

அவர்களில் பலர் தெருக்களிலும், வயோதிகர் இல்லங்களிலும், எங்கு வசதிப் படுகிறதோ அங்கு அண்டுவதற்கு இடம் தேடவேண்டிய நிர்பந்ததிற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

அதிலும் 55% பெண்கள் 60 வயதைக் கடந்தவர்கள். கணவனை இழந்து விதவையானவர்கள்.

ஆழமாக நோக்கினால், சுயநலமும், சந்தர்ப்ப சூழ்நிலைகளின் உந்துதலும் வாழ்க்கைச் சக்கரத்தில் சுற்றும் நம்மில் பலரையும் அப்படியொரு நிலைமைக்கு உள்ளாக்குகிறது என்றும் எண்ணத் தோன்றுகிறது. ஆனால் மனிதாபிமானத்திற்கும், பரஸ்பர அன்பிற்கும் இடமில்லாத இதயம் ஒரு இயந்திரத்திற்கு சமமாகும். இன்று நாம் செய்யும் தவறு நாளை நம்மையும் அதே நிலைக்கு உள்ளாக்கும் என்பதை நாம் மறக்கக் கூடாது. நமது பிள்ளைகள் வருங்காலத்தில் நம்மில் அன்பு வைக்காமல் போக நாம் இடும் வித்தே காரணம் என்பதை நாம் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நாம் மாறி வருகிறோம் என்பது உண்மை. என்னதான் மாற்றங்கள் காலத்தாலும் மாறும் மனப்போக்காலும் ஏற்பட்டாலும், நம்மைப் பெற்றவர்களைப் பாதுகாப்பது நமது கடமை என்பதை மறக்கலாமா?

கல்யாணமாகி கணவன் வீடு புகுந்தவுடன், ஒரு பெண் அந்த வீட்டுச் சொத்து போல், தனது தாய் தந்தையை மறக்க வேண்டும் என்பது கிடையாது. அது போல் தன் மாமா மாமியாரையும் ஒரு அப்பா அம்மா போல் மதிக்கும் குணம் மருமகன்களுக்கும் வரவேண்டும்.

எந்தப் பெற்றோருக்கு உதவி தேவையோ அதை செய்யவேண்டிய கடமை அணைவருக்கும் உள்ளது. வயது முதிர்ந்து அன்பு தேடும் பெரியவர்களை, குழந்தைகள் போல் எண்ணி, அவர்களிடம் அன்பு செய்வது மிக முக்கியம். தம் வாழ்நாளில் இன்னும் எவ்வளவு மீதம் உள்ளது என்று தெரியாமல் வாழும் அவர்களுக்கு நாம் பிள்ளைகளாகச் செய்யும் கைமாறு அதுதான் ஆகும்.

என்ன நண்பர்களே, நான் சொல்வதை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா?

முகில்

(புகைப்படம் உதவி: வாஷிங்க்டன் போஸ்ட்)

No comments:

Post a Comment